கி.பி. 1757 முதல் 1857 வரை இந்தியரின் நிலைமை

August 7, 2006

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதித் தொடக்கத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதி முடிவு வரையுள்ள ஒரு நூற்றண்டுக் காலத்தில் பாரதம் அந்நியர்களின் வேட்டைக்காடாக விளங்கியது. பிரிட்டிஷ்–பிரெஞ்சூ–டச்சூ-போர்ச்சுகீசு நாடுகளின் நாடோடி வர்த்தகக் கூட்டங்கள், தங்கள் சரக்குகளை விற்கும் சந்தைக் கடையாகப் பாரத நாட்டைப் பயன்படுத்தின. வாணிகத்தில் ஏற்பட்ட போட்டி–பொறாமை காரணமாக, அந்த நாடோடிகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதோடு., உள்ள நாட்டு மன்னர்களிடையேயும் சண்டை மூட்டி விட்டுப் பாரதம் முழுவதையும் ‘குருஷேத்திரம்’ ஆக்கினர்.

அரசுரிமை ‘ஏலம் ‘

1757ல் வடக்கே வங்கத்தில் நடந்த ‘பிளாசிப் போர்’ தொடங்கி, 1857ல் வடபாரதம் முழுவதிலும் நடை பெற்ற’ சிப்பாய்ப் புரட்சி’ வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சிறியவையும் பெரியவையுமாக எத்தனை எத்தனையோ பயங்கரப் போர்கள் நடைபெற்றன. அந்தப் போர்களிலே பாரத மன்னர்களின் தலைகளைப் பந்தாடினார்கள் பரங்கியர்கள்! அரியாசனத் தமர்ந்து அரசாளும் உரிமையையும் தங்கள் வர்த்தகச் சரக்காக்கி ‘ஏலத்’தில் விட்டார்கள்! இங்கு மங்குமாகப் பரங்கியர்களை எதிர்த்துப் போரிட்ட ஒரு சில சுதேச மன்னர்கள், தங்கள் சகோதர மன்னர்களாளேயே காட்டிக் கொடுக்கப்பட்டு அந்நியர்களால் மிகக் கொடுமையாகப் பழிவாங்கப்பட்டார்கள். இதற்கு பாஞ்சால்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், சகோதர மன்னர்களான புதுக்கோட்டை, எட்டயபுரம் அதிபதிகாளால் காட்டிக் கொடுக்கப்ட்டதை சான்றாகக் கொள்ளலாம்.

பாரத்தில் புகுந்து, அதனை அடிமைப்படுத்த முயன்றவர்கள் பிரிட்டிஷ் - பிரெஞ்சு - டச்சு - போர்ச்சுகீசு எனப் பல நாட்டினராயினும், அவர்களிடையே நடைபெற்ற போட்டி — போராட்டங்களில் இறுதியாக வெற்றி பெற்றவர் பிரிட்டிஷாரே ஆவர். சில சின்னஞ் சிறு பகுதிகள் நீங்கலாக, பாரதம் முழுவதையுமே பிரிட்டிஷார் கைப்பற்றிக்கொண்டனர்.

இதற்கு முன்னறே 1755- ஆம் ஆண்டு ஒலித் பூலித்தேவரின் முதல் சுதந்திரக் குரல் பின்னர் பலமுறை எதிரொலித்தது. 1772-ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வேலு நாச்சியார் தலைமையிலும், 1795- ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799-ஆம்ஆண்டு வீரபாண்டியகட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது சகோதரர் தலைமையிலும் தெற்கிலும் அன்றே ராக்கெட் தயாரித்த மாமன்னன் திப்புசுல்தானும் ராணி லட்சமிபாயும்

பாம்பின்வாய்த் தேரை

பாபம்பின் வாய்ப்பட்ட தேரை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்படுவதுபோல், ‘ஆங்கிலேயர் ஆதிக்கம்’ என்னும் மலைப் பாம்பின் வாய்ப்பட்ட பாரதம், கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கப்பட்டது. அதனை முற்றிலும் தன் வயிற்றுக்குள் கொண்டு செல்ல ஒரு நூற்றாண்டுக் காலம் பிடித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு. ஆம்; ஒரு நூற்றாண்டுக் காலம் தன் சுதந்திரத்துக்காகப் போராடிய பிறகே பிரிட்டிஷ் பேரரசுக்குப் பாரதம் அடிமைப்பட்டது. இது, பாரத மக்கள் பெருமைப்படத்தக்க செய்தியாகும். .

1857ல் துவங்கிய ‘சிப்பாய்ப் புரட்சி’ தோல்வியுற்ற பின்னர், பாரதம் முழுவதிலும் ‘ சுடுகாட்டு அமைதி’ நிலவியது. அந்த அமைதி கால் நூற்றாண்டுக் காலம் நீடித்தது. அதன் பின்னரே. சட்ட ரீதியான முறையில் காங்கிரஸ் மகாசபையின் மூலம் பாரத்தில் தேசிய எழுச்சி தோன்றியது.

மத உணர்ச்சி

பாரதம் ஒரு நூற்றாண்டு காலம் போராடிய தென்றால் அதற்கு முக்கியமான காரணம், பாரத மன்னர்களின் அரசியல் உணர்ச்சியைவிட, மக்களின் மத உணர்ச்சியேயாகும். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு அந்நிய நாட்டினராக இருந்ததோடன்றி, இந்த முஸ்லிம்–சீக்கியர்களுக்கு அந்நிய மதத்தினராகவு மிருந்தனர். அதனால், “அந்நிய நாட்டினருக்க அடிமைப்படுகிறோம்,” என்பதிலிருந்த வெட்கத்தைவிட, “அந்நிய மதத்தினருக்கு அடிமைப்படுகிறோம், ” என்ற வேதனையையே ஒரு நூற்றாண்டுக் காலம் போராடுவதற்கான ஆற்றலைப் பாரத மக்களுக்குத் தந்தது. ஆம், அன்றைய தேசியம் மதச் சார்டபுடையது. அதனால், பாரத மன்னர்களின் எதேச்சாதிகாரக் கொடுமைகளுக்கு உட்பட்டிருந்த மக்கள், அரசுரிமை பறிபோவதைவிட, அந்நிய மதத்தினருக்கு அடிமைப்படுவதையே பெருத்த அவமானமாக, அநீதியாக, அடிமைத்தனமாகக் கருதினர்.

இந்த உணர்வு காரணமாக, இந்து — முஸ்லிம் — சீக்கிய மதங்களைச் சார்ந்த மக்களுள் மிகப் பெரும்பாலோர் ஒரே அணியில் நின்று போராடினர், இதனை, 1857ல் நிகழ்ந்த ‘ சுதந்திரப் புரட்சி’ யின் வரலாறு புலப்படுத்தும்.

1757-க்கும் 1857 இடையிலுள்ள ஒரு நூற்றாண்டில் அரசியல் துறையில் ஏற்பட் மாறுதல் மதத்துறையிலும் மகத்தானதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. அந்நாளில், மதம் வேறு, அரசியல் வேறு என்ற உணர்வு இந்திய மன்னர்களிடமோ, மக்களிடமோ இருக்கவில்லை. அதாவது, ‘சமயச் சார்பற்ற அரசு’ என்ற சித்தாந்தம் நடைமுறையிலில்லை. அரசியலும் மதமும் பின்னிப் பிணைந்து கிடந்தன. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அரசியலும் இதற்கு விலக்காக இல்லை.

மதமும் அரசியலும்

இந்தியாவில் அரசியல் ஆதிக்கம் பெற்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் தங்கள் அரசியல் அதிகாத்தைப் பயன்படுத்தி இந்தயாவில் கிறத்துவ மதத்தைப் பரப்ப முயன்றனர். ஏன்? இந்தியாவையே கிறித்துவ நாடாக மாற்றிவிடவும் திட்டமிட்டனர்.

பிரிட்டிஷார் பாரத்தில் காலூன்றுவதற்கு முன்பு, உள்நாட்டு மன்னர்கள் , தத்தம் மதங்களைப் போற்றி வளர்த்தனர்; பிற மதங்களையும் மதித்து நடந்தனர்; மதாசாரியர்களைக் கெளரவித்து, அவர்களுடைய அறிவரைகளைக் கேட்டு, அதன்படி ஆட்சி நடத்தினர்; மதாசாரியர்களைக் கெளரவித்து, அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு, அதன்படி ஆட்சி நடத்தினர்; அரசவையிலே, சமயப்புலவர்கள் ‘ஆஸ்தானப் புலவர்களா’க இருந்தனர். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையால் இந்த நிலைமை மாறியது.
புதிதாக உருவெடுத்த பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் அரசியல் ஆதிக்கம், கிறித்துவ மதத்தின் வளர்ச்சியைக் கருதியதால், உள்நாட்டு மதங்களை, மதாசாரியர்களைப் புறக்கணித்து, அவமதித்ததது இதனால், இந்து — முஸ்லீம் — சீக்கிய மதங்களைச் சார்ந்தவர்களிடையே வெறுப்பு வளர்ந்தது. அது, நாளடைவில் கிறித்துவ ஆட்சிக்கு எதிரான வெறியாகவும் மாறியது.

‘கடவுள் சித்தம்’

கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகிகள் சிலரும், இந்திய பாதிரிமார்கள் சிலரும் வெளியிட்ட கருத்துக்கள், இந்தியர்களிடையே வளர்ந்திருந்த வெறுப்பை அதிகரிக்கச் செய்தது.
“பரந்த இந்துஸ்தான சாம்ராஜ்யத்தைக் கடவுளே நம்மிடம்ஒப்புவித்துள்ளார். இந்தியாவின் ஒருமுனையிலிருந்து மற்றொரு மனைவரையில் கிறித்துவக் கொடி பறக்கவேண்டு மென்பதே அவரது கட்டளை. அந்தக் கட்டளை நிறைவேற ஒவ்வொரு ஆங்கிலேயனும் தன் முழுச் சக்தியையும் உபயோகிக்க வேண்டும். இந்தியவை ஒரு கிறித்துவ நடாகச் செய்யும் விஷயத்தில் அணுஅளவும் தயக்கமோ, தாமதமோ கூடாது.”
–வீர சாவர்க்கரின் ‘எரிமலை,பக்.44.

இது, பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனி டைரக்டர்போர்டின் தலைவர் மாங்கிள்ஸ் என்பார், பிரிட்டிஸ் பாராளு மன்றத்தில் தெரிவித்த கருத்தாகும்.

கென்னடி என்ற ஓர் ஆங்கிலப் பாதிரியார் வெளியிட்ட கருத்துவருமாறு:
“நமக்கு எவ்விதக்கஷ்டம் நேர்ந்தாலும், எவ்விதத் துரதிருஷ்டம் நேர்ந்தாலும் இந்தியாவில் நமது சாம்ராஜ்யம் இருந்து வரும்வரையில், அங்கு நமது முக்கியமான கடமை கிறித்துவ மதத்தைப் பரப்புவதுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கன்னியாகுமரியிலிருந்து இமாசலப் பிரதேசம் வரையில் இந்துஸ்தானம் முழுவதும் இந்து — இஸ்லாம் மதங்களைக் கண்டித்து, எல்லோரும் கிறித்துவ மதத்தைத் தழுவச் செய்யவேண்டும். அதுவரையில் நம் முயற்சிகளை நாம் இடைவிடாது செய்து வரவேண்டும். அதற்காக நாம் எல்லாவித முறைகளையும் கையாள வேண்டும். நமக்குள்ள சக்தி முழுவதையும் உபயோகிக்க வேண்டும். இந்தியா கீழ்த்திசையிலேயே கிறித்துவ மதத்தின் ஒரு பிரம்மாண்டமான கோட்டையாகிவிட வேண்டும். அதுவரையில்நமதுமுயற்சி சிறிதும் தளரக்கூடாது. நாம் விடாமுயற்சியுடன் இருந்து வருவோமானால், இறுதியில் கடவுள்நமக்கு வெற்றியைக் கொடுத்தே தீருவார்.”
–’எரிமலை’பக்.45.
ஆங்கிலமும் அதற்கே!

“ஆங்கிலக் கல்வியார் நமக்குப் பல நன்மைகள் ஏற்பட்டன” என்று ஓயாது இன்றும் கூறப்படுகிறது. அந்தக் கல்விமுறையின் கர்த்தா லார்டு மெக்காலே ஆவார். அவர்,
“நமது கல்வித் திட்டமானது, வழுவின்றிப் பின்பற்றப்படும் பட்சத்தில், இன்னும் முப்பதாண்டுக் காலத்துக்குள் வங்காளத்தில் ஓர் இந்துவோ அல்லது முஸ்லிமோ இருக்க மாட்டான் என்பது என் உறுதியான நம்பிக்கை.”
–’எரிமலை’பக்.44.

என்று 1836-ஆம் ஆண்டில் வங்காளத்தில் முதன் மதலாக ஆங்கிலக் கல்வி முறை ஆரம்பமானபோது கூறினார்.
மெக்காலே மிகுந்த எச்சரிக்கையுடன், “இந்தியர்களெல்லாம் ஆங்கிலக் கல்வி முறையால் கிறித்துவர்களாக்கப்படுவார்கள்,” என்று சொல்லாமல், ‘இந்துவோ அல்லது முஸ்லிமோ இருக்கமாட்டான்’ என்று கூறினார். ஆம்; ஆங்கிலக் கல்வி, மதத்துறையில் ‘இரண்டுங்கெட்டான்’களைச் சிருஷ்டிக்கும் என்றார். இன்றும் நாம் காணும் காட்சி அதுதானே!

மதம், அரசியால் கருவி !

பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் ஒரு கருவியாய்க் கிறித்துவ மதத்தைப் பயன்படுத்தினர் ஆங்கிலேயர். இந்தத் திருப்பணியில் வர்த்தக நோக்குடைய பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள், கல்வித் துறையில் ‘தொண்டு’ புரிந்த லார்டு மெக்காலெ போன்ற அறிஞர்கள், சமயத் தொண்டர்களான பாதிரிகள் ஆகிய ஆங்கிலேயர் எல்லோரும் ஒரு மனத்துடன் - முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தனர்.

கிறித்தவப் பாதிரிமார்கள் இஸ்லாம் - இந்து மதங்களுக்கு எதிராக நடத்திவந்த பிரசாரப்போருக்குத் துணை புரியும் பொருட்டு,”இந்தியர் யாரும் சொந்தத்தில் அச்சகம் நடத்தக்கூடாது,” என்று தடை விதித்தது பிரிட்டிஸ் கம்பெனி. இந்தத் தடை 1835- ஆம் ஆண்டுவரை அமுலில் இருந்தது. அச்சகத்தை நடத்தும் உரிமை ஆங்கிலேயருக்கு ஏக போகமா யிருந்ததால், அச்சுப் பிரசரங்களின் மூலம் தங்கள் சமயவளர்ச்சிக்குப் பாடு படும் வாய்ப்பு இந்திய மக்களுக்க இல்லாம லிருந்தது. தாங்களே படைத்துக்கொண்ட இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இந்தியர்களைக் கிறித்துவர்களாக மாற்ற முயன்றனர் பாதிரிகள்.

‘கொழுப்போ, கொழுப்பு!’

இந்த நேரத்தில் இராணுவத்தின ரிடையே, எரியும் தீயில் எண்ணெய் விட்டதுபோல ஒருசம்பவம் நிகழ்ந்தது. அதனை, வீர சாவர்க்கார், கீழ்வருமாற வருணிக்கின்றார்:

“கொழுப்புத் தடவப்பட்ட புதிய தோட்டாக்களை, இந்திய சிப்பாய்கள் உபயோகித்துத் தீர வேண்டும் என்று கட்டளைகள் பிறந்தன. புதிய தோட்டாக்களை அபரிமிதமாக உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளும் பல்வேறு இடங்களில் திறக்கப்ட்டன. தோட்டாக்கள் மிருதுவாகவும் வழுவழுப்பாகவும் இருப்பதற்காக ஒரு விதக் கொழுப்பை உபயோகித்தனர். அக்கொழுப்பை ஏற்கனவே கையால் அகற்றியது போல அகற்றக்கூடா தென்றும் அதைப் பல்லால் கடித்த அகற்றவேண்டு மென்றும் உத்தரவிட்டனர். எவ்விதம் பல்லால் கடித்து அதைச் சலபமாக அகற்றலா மென்பதும் சிப்பாய்களுக்கக் கற்பிக்கப்ட்டது.

“அதிகாரிகள் தோட்டாக்களுக்கு ஆட்சேபகரமான கொழுப்பைத் தடவியதுடன், ‘முட நம்பிக்கை காரணமாக அவைகளைக் கடிக்குமறுக்கும் சிப்பாய்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்’ என்றும் பயமுறுத்தினர்.”
–’எரிமலை’பக்.54.
இந்த நிகழ்ச்சி, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியச் சிப்பாய்களிடையே மகத்தானதொரு ஆவேசத்தைக் கிளப்பி, மதஉணர்ச்சி கலந்த அரசியல் புரட்சிக்கு அடி கோலிவிட்டது. அது காரணமாக வீறிட்டெழுந்த ‘சிப்பாய்ப் புரட்சி’ சுமார் ஓராண்டுக் காலம் பிஷாவர் முதல் கல்கத்தாவரை உள்ள வடபாரத்தின் பெரும்பகுதியில் நடைபெற்றது. அதில், இந்து - முஸ்லிம் கலான மன்னர்கள, இராணுவத் தளபதிகள், மெளல்விகள், புரோகிதர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் பங்கு கொண்டனர்.

அரசியல் பிரகடனம்

மக்களின மத உணர்ச்சி புண்படுத்தப்பட்டதை உணர்ந்த பிரிட்டிஷ் சக்கரவர்த்தினியான விக்டோரியா ராணியார், புரட்சியை ஒடுக்கும் உள்நோக்குடன் ஒருபிரகடனம் வெளியிட்டார். அதில் ,”கிழக்கிந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்ட சமஸ்தானங்கள் போக, எஞ்சியுள்ள சமஸ்தானங்களின் ‘சுதந்திர அந்தஸ்து’ அங்கீரிக்கப்டும். பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களின் மத விஷயங்களில் தலையிடாது. கல்வி, திறமை, யோக்கியப் பொறுப்புள்ளவர்கள் யாராயினும், சாதி–மத வேற்றுமையின்றி அவர்களுக்கு உத்தியோகம் வழங்கப்படும்” என்று உத்தரவாதம் கொடுத்தார். இந்தப் பிரகடத்துக்குப் பிறகு, மதமும் அரசியலும் கலந்து நிகழ்ந்த ‘சுதந்திரப் புரட்சி’ பிசுபிசுத்துவிட்டது.

1757- ஆம் ஆண்டு முதல் 1857- ஆம் ஆண்டு வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் பாரத மக்கள் அரசுரிமையை இழந்ததோடு, மத உரிமைகளையும் இழக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இரையாயினர். பிரிட்டிஷ் அரசியாரின் பிரகடனத்தால் பாரதத்தின் நிர்வாகம் கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் கைக்கு மாறியது. அதனால், மதத் துறையில் இந்திய மக்களின் நிலைமை மாறியதென்றாலும், அரசியல்- பொருளாதாரத் துறைகளில் அடிமைத் தனம் முன்னிலும் மோசமாக உறுதியடைந்தது.

மதத்தில் மறுமலர்ச்சி

‘தீமையில் விளைந்த நன்மை’போல, பாரதம் அரசியல் — பொருளாதாரத் துறைகளிலே அடிமைப் பட்டதென்றாலும், அதன் விளைவாகவும் ஒரு ‘நன்மை’ ஏற்படத்தான் செய்தது. ஆம்; மதத்துறையில் ‘மறுமலர்ச்சி’ தோன்ற வழி பிறந்தது. இந்து மதத்திலுள்ள பழைய நம்பிக்கைகளுக்கு, பழக்க வழக்கங்களுக்கு ‘முடநம்பிக்கைகள்’ எனப் பெயர் வைத்து, அவற்றிற்கு எதிராகப் பிரசாரப் போர் நடத்தினர் கிறித்தவப் பாதிரிகள். அதனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எதிர்ப்பின்றி வளர்ந்த புரோகித மதம் எதிர்ப்பைக் கண்டுவிட்டது.

சாதியால்–மதத்தால் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களிடையே கிறித்தவப் பாதிரிகளின் பிரசாரம் உள்ளொளியை ஏற்படுத்தியது. பாதிரிகள் வெறும் மதப் பிரசாரத்தோடு நின்று விடாமல், தாழ்த்தப்பட்டுக் கிடந்த இந்து மக்களை அணுகி, அவர்கள்பால் அன்பு காட்டி, ஆக்கவழியிலும் தொண்டு புரிந்தனர்; கல்வி, சுகாதாரம், குடியிருப்பு ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டவர்களுக்க உதவிபுரிந்தனர். இதனால் சேரிகளிலும், குடிசைப் பிரதேசங்களிலும் பல நூற்றாண்டுகளாகச் ‘சிறை’ வைக்கப்பட்டிருந்த இந்துக்களுள் பலர் கிறித்தவ மத்தில் சேரலாயினர். அவர்கள்எண்ணிக்கை கொஞ்சமன்று; கோடி, கோடியாகும்.

‘இந்தியாவில் ‘ ஏற்றபட்ட இந்த மாறுதல், இந்து மதத்திலுள்ள படித்தவர் சிலரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்து மதத்தைப் புனருத்தாரணம் செய்யவேண்டும் மென்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது. இந்துக்களிடையே உள்ள தத்துவ பேதங்கள், மத பேதங்கள், சாதி பேதங்கள்– காரணமாக, இந்தியச் சமுதாயம் ஒற்றுமையின்றிச் சுக்குநூறாக உடைபட்டுக் கிடப்பதை உணர்ந்தனர்.

1757-முதல் 1857-வரையுள்ள ஒரு நுற்றாண்டுக் காலத்திலேயே, மதமாற்றம் அதிகரித்தது. அதன் விளைவாக, படித்த இந்துக்களிடையே மனமாற்றம் ஏற்படலானது. கிறித்து மதத்தின் வளர்ச்சியால் இந்து மதம் நலிவதுபற்றியோ, அந்த மதத்தின் துணைகொண்டு காலூன்றிய பிரிட்டிஷ் ஆதிக்கம் இழைக்கும் இன்னல்கள் பற்றியோ சமுதாயத்தின் அடித்தளத்திலிருந்து சாதாரண மக்கள் அதிகமாகக் கவலைப்படவில்லை. காரணம், அவர்களெல்லாம் ஏற்கனவே உள்நாட்டவராலேயே சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வந்ததுதான். இந்த நிலை, சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த படித்த மக்களுள் சிலரையேனும் சிந்திக்கவைத்தது. உயர்தர – நடுத்தர மக்களுள் சிலரிடையே தோன்றியிருந்த இந்தப் புத்துணர்ச்சி, மகத்தான தொரு சமயப் புரட்சி நடத்தும் தலைவர்கள் தோன்றுவதற்கான சூழ்நிலையைத் தேர்ற்றுவித்தது. பின்னே தோன்றவிருந்த அரசியல் புரட்சிக்கு முன்னோடியாகச் சமயப் புரட்சி ஏற்படவேண்டு மென்பது தெய்வத்தின் திருவுள்ளம் போலும்!

இந்தச் சூழ்நிலைக்கு மற்றோரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு. அதனை உருவாக்கிய பொறுப்ப, பாரதத்தின் மீது படையெடுத்த இஸ்லாமிய மன்னர்களுடையதும், இஸ்லாமிய மதத்தினடையது மாகும். அந்தவரலாற்றுப் பின்னணியை இங்குச் சருக்கமாகவேனும் கூறுவது அவசியமாகும்.

‘கஜ்னி பாதை’

கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ஆப்பானிஸ்தானத்திலிருந்து பாரதத்தின் மீது முதன் முதலாகப்படையெடுத்தான் கஜ்னி முகம்மது, அவன், தொடர்ந்து பதினேழுமுறை பாரதத்தைத் தாக்கினான். அவற்றில்,” சோமநாதபுரப்படையெழுச்சி’ இந்தியக்கலாசாரத்தின் மீது விழுந்த பயங்கரத் தாக்குதலாகும். சோமநாதரின் விக்கிரகத்தை உடைத்துப் பெரும்பொருள்திரட்டிக்கொண்டு தனது நாட்டுக்குத் திருப்பிச் சென்றான் கஜ்னி முகம்மது. இப்படிச் செய்வது எல்லா மதங்களையும் சாரந்த மன்னர் பெருமக்களின் ‘யுத்த (அ)நாகரிக’ மாகும். ஆயினும், இஸ்லாமியனான கஜ்னி முகம்மதின் வெறிச்செயல் இந்துக்கள் நிறைந் பாரத்தில் மதரீதியான பெரும் போருக்கு வித்தாகிவிட்டது.

பாரத்தின் தெய்விகக் கலாசாரத்திற்குக் கஜ்னி முகம்மது தந்த அடி, இந்து சமயவாதிகளை விழித்தெழச் செய்தது. கஜ்னி முகம்மது காலம் தொடங்கி அடிக்கடி பாரதத்தின் மீது ஏற்பட்ட இஸ்லாமியரின் படையெடுப்புகள், பாரத மக்களின் அரசியல் உரிமைகளை மட்டுமல்லாமல், மதவழிப்பட்ட கலாசார உரிமைகளையும் தாக்குபவையாக இருந்தன.

போர் வாழ்க்கை!

அதனால், கி.பி. பதினோராம்நூற்றாண்டு தொங்கிப் பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரையுள்ள சுமார் 750 ஆண்டுகளில், வட பாரத மக்கள், தங்கள் அரசுரிமையையே யன்றி, கலாசார உரிமையையும் காத்துக் கொள்ளப் போராடினார்கள். அதனால் அந்தத் துரதிர்ஷ்ட சாலிகளுக்குப் போர் புரிவதே ‘வாழ்க்கை’யாக இருந்தது! அந்தப் போரில் இருதரப்பிலும் மக்கள் சிந்திய செந்நீரும் கண்ணீரும் கலந்து ஆறெனப் பெருகி ஓடியதெனலாம். நீண்ட காலம் உடலில் தொடந்துவிட்ட நோய், மருத்துவக் கலையையும் புறங்கண்டு விடுவது போல, பாரத்தில் இந்து - இஸ்லாமிய மக்களிடையே பல நூற்றாண்டுகளாக நடந்த போர், அவர்கள் பின்பற்றிய மதங்களின் அற நெறிகளையும் புறங்கண்டு விட்டது.

அடிச்சுவடும் அழிந்தது!

வந்தேறிய முஸ்லிம் சமுதாயத்தினர் (முஸ்லிம் மன்னர்களுடன் பல ஆயிரம் முஸ்லிம் மக்கள், அதிகாரிகள் , பணியாளர்கள் வந்தனர் , அவர்கள் தான் வந்தேறிகள் .தஞ்சையில் மராட்டிய மன்னன் ஆட்சி செய்த காலத்தில் தனது மக்களை அதிகாரிகளாகவும் , பணியாளர்களாகவும் கொண்டு வந்து இன்றும் அவர்கள் இங்கு தான் இருக்கின்றனர் அதுபோலத்தான் முஸ்லிம் மக்கள், மற்றவர்கள் மாதமாறிய நமது நாட்டு மக்கள்) அல்லது அவர்கள் வழியில் தோன்றிய மக்கள், தங்கள் பூர்வதேசத்திற்குத் திரும்பிச் செல்லமுடியாதபடி அவர்களுடைய முன்னோர்கள் வந்த அடிச்சுவடும் அழிந்து போய்விட்டது. ஆம்; ஆக்கிரமிப்பாளர்கள் துவக்கிவைத்த போரை, அவர்கள் மறைந்த பின்னரும் அவர்களுடைய வழி வழிச் சந்ததிகள் தொடர்நது நடத்தியதால், அதன் மீது படிந்திருந்த ‘அந்நிய’த்தன்மை அழிந்து, ‘உள் நாட்டுப் போர்’ என்று சொல்லத்தக்க நிலைக்கு மாறுதல் அடைந்து விட்டது. இந்தப் பரிதாப நிலை, பாரத நாட்டிற்குச் சரித்திரம் கொடுத்துவிட்ட சாபம்! இந்தச் சாபம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார் வரும் வரை நீடித்திருந்தது. வந்தவர்கள் நிலை பெறுவதற்கும் உதவி புரிந்து விட்டது.

இந்து - முஸ்லிம்மக்களிடையே நிலவிய விரும்பத்தகாத மதப் பகைமையைப் பயன் படுத்தி, தங்கள் கிறித்தவ மதத்தையம் பிரிட்டிஷ், பேரரசையும் பாரதத்தில் நிலைநிறுத்த முயன்றனர் கிறித்துவப் பிரசாரகாரகளும் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆதிக்கம், படிப்படியாக வளர்ந்து - வலுப்பெற்று, 1857ல் வெளியான விக்டோரியா மகாராணியார் பிரகடத்தின் விளைவாகப் பூரணத்துவம் பெற்றது.

கவிஞரின் கண்ணீர் !

இப்படி, இஸ்லாமிய கிறித்தவ சமுதாயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இராணுவ ரீதியில் பாரதக் கலசாரத்தின் மீத படையெடுத்தப் போரிட்ட காலத்தில், மக்கள் பட்ட அல்லல்களைக் கண்ணீரால் கவிதை தீட்டிக் காட்டுகின்றார் பாரதியார்.

பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசர் இந்தியா வந்த காலை, பாரதத் தாய் வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் பாவனையில் கவிதை எழுதியுள்ளார் பாரதியார். அந்தக் கவிதையிலே,
” செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில”

என்று கூறி, மொகலாயர் படையெடுப்பாலும் , அவர் தம் ஆட்சியாலும் பாரத மக்களுக்குற்ற அல்லல்களை உரைத்து, பிரிட்டிஷாரின் வருகையால் அந்தப் பழைய கொடுமைகள் அகன்றன என்பதனை,

“மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின,
போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதிபெற்று உய்வ ராயினர். எனவே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிதர லுற்றனள், பொருள் செயற்குரிய
தொழிறகணம் பலப்பல தோன்றின; பின்னும்
கொடுமதப்பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினில் பெண்களை எறிவதூஉம் இரதத்து
உருளையில் பாலரை உயிருடன் மாய்த்தலும்
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால்.
ஆயினும் என்னை? ஆயிரம் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை.”

என்று பாடி, இஸ்லாமியர் படை யெடுப்பால் விளைந்த கேடுகளுள் சில பிரிட்டிஷாரால் நீக்கப்பட்டனவாயினும், பல கேடுகள் இன்னும் நிலைத்தே நிற்கின்றன என்கின்றார். பிரிட்டிஷாரின் வருகையால் விளைந்த நன்மைகளைக் கூறிய அவர், அவர்களுடைய ஆதிக்க வெறியால் இந்து - முஸ்லி மக்களுக்கு விளைந்த புதிய கேடுகளையும் கூறுவாராகி,

“நல்குர வாதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால்,”

என்று பாடுகின்றார்.

இந்தச் சூழ்நிலையில், மத வெறியை அழித்து, மத நெறியை வளகர்க்கும் மகான்கள தேவைப்பட்டனர். இந்து - முஸ்லிம் - கிறித்தவ மதங்கள் ஒன்றுக் கொன்று எதிரும் புதிருமான இராணுவ முகாம்களக விளங்கிய அவல நிலையை மாற்றி, அவற்றிடையே சமரச மனோபாவத்தை வளர்க்கத்தக்க சன்மார்க்க ஞானியார் தேவைப்பட்டனர். சுருங்கச் சொன்னால்.

பிற சமயங்களின் படையெடுப்பால் அழிந்து கொண்டிருந்த பாரதக் கலா சாரத்தைக் காக்கவும்,

இந்து - முஸ்லிம் - கிறித்தவ - சீக்கிய சமயங்களிடையே ஒரூமைப்பாடு காணவும்,

இந்துக்கிளடையே நிலவிய மூட நம்பிக்கைகளை, சாதி வழிப்பட்ட உயர்வு - தாழ்வு மனப்பான்மைகளை, போலிவைதிகர்களின் புரட்டுச் சடங்குகளை அடியோடு அழிக்கவும் புரட்சிகரமான சீர்திருத்தவாதிகள் தேவைப்பட்டனர்.

இங்கே வெள்ளையர் ,கொள்ளையர் ,பரங்கியர், கும்பேனியர், சீமைக்காரன் என்றெல்லாம் நாம் சொல்கிறோமே!! அவனால் நமக்கு ஏற்பட்ட பயனைப் பற்றி யாராவது வாய்திறந்தார்களா ?. அந்த வெள்ளையன் என்ன செய்தான் ?, சிதரிக்கிடந்த குறு நில மன்னர்களை யெல்லாம் அழித்து ஒரே இந்திய யூனியனாக்குவதற்கு வழிகோளினான் ; சில மன்னர்களுக்கு சுதந்தரம் கொடுத்திருந்தாலும் , சுதந்திரப் போர் என்ற கோதாவில் நாம் சுதந்திரம் பெற்றபின் அவர்களது சமஸ்த்தானங்களை எடுத்துக்கொண்டோம் . வெள்ளையன் வரவில்லை யென்றால் சிதருண்ட நாடு சிறு சிறு நாடாக அனைவரும் முஸ்லிமாக ; முஸ்லீம் நாடாகவும் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு .அல்லது மதுரை இந்து நாடு தஞ்சை முஸ்லிம் நாடு என ஆகியிருக்கவும் வாய்ப்புண்டு. ஏன் என்றால் தென்னகத்தைப் பொருத்தளவில் ஆர்க்காட்டு நவாபு, திப்பு சுல்தான் போன்றவர்கள் வலிமைமிக்கவர்களாக இருந்தார்கள் . ஏன் ஆர்க்காட்டு நவாபு தான் தென்னகத்தில் கப்பம் பெற்று வந்து அந்த உரிமையை கும்பேனிக்கு கொடுத்தான்.

வள்ளலார் கண்ட ஒருமை பாடு என்ற புத்தகத்தில் இருந்தும்

அங்கெங்கு படித்ததிலிருந்தும்

Comments »

The URI to TrackBack this entry is: http://velu.blogsome.com/2006/08/07/25/trackback/

No comments yet.

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>


New Page 2