நேதாஜி

July 29, 2006

நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் பிரபாவதி தேவி தம்பதிகளின் 9வது குழந்தையாக 23/1/1897 ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்).

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், “ஐ.சி.எஸ்” பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்” என்று வீர உரை நிகழ்த்தினார். அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை “நேதாஜி” (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை.

1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட “பார்வர்டு பிளாக்” என்ற அமைப்பை உருவாக்கினார். இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது.

ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.

1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். “சயாதீன்” என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார்.

காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.

நேதாஜியின் வீர சாகசம்

இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட படை அது. அவர்கள் பிரான்சு நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப்போரிட்டனர். 1941 டிசம்பர் 7-ந்தேதி, போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் குதித்தது. வெகு எளிதாக சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது. தாய்லாந்து, மலேயா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் கைப்பற்றிக்கொண்டு, மேலும் முன்னேறின. பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் ஆகியது. ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களைக்கொண்டு, “இந்திய தேசிய ராணுவம்” அமைக்கப்பட்டது.

போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார். ஜப்பானுக்கு எப்படிச் செல்வது? கடலில் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கிகளும் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். “இது ஆபத்தானது” என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால் நேதாஜி துணிவுடன் 1943 பிப்ரவரி 8-ந்தேதி ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார். அவருடைய செயலாளர் கர்னல் ஹசன், ராணுவ அதிகாரி குலாம் ஹைதர், ஒரு ஜப்பான் அதிகாரி, ஒரு ஜெர்மன் அதிகாரி ஆகியோரும் உடன் புறப்பட்டனர்.

எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக்கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது. மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கியை எதிர்கொண்டு வரவேற்றது. ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏப்ரல் 28-ந்தேதி மாறினார் நேதாஜி. நீர்மூழ்கிக்கப்பல் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை,

மே 6-ந்தேதியன்று நேதாஜி அடைந்தார். அதாவது, நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் 3 மாதம் நீடித்தது.

சுமத்திராவில் ஒரு வாரம் தங்கியபின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்குப் பயணமானார். மே 16-ந்தேதி டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்டு, ஜுலை 2-ந்தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய வியூகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, “தேசிய மாணவர் படை”யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. அதன்பின் நேதாஜி என்ற பெயர் உலகமெங்கும் பரவியது.

1943 அக்டோபர் மாதம், “சுதந்திர இந்திய அரசாங்க”த்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.

அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார் நேதாஜி. தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.

நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக “பாங்கி” தொடங்கவேண்டும் என்றார், நேதாஜி. “இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?” என்று ஒரு முஸ்லிம் கோடீஸ்வரர் கேட்டார். “ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்” என்று நேதாஜி கூறியதும், “இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்” என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார். இரண்டே வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.

இந்திய தேசிய ராணுவத்துக்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர். நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின. ஒருமுறை, ஒரே மாலை 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிற்று! நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர்.

பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த நன்கொடை மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார்நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், “ஜான்சிராணிப்படை” என்ற பெயரில் இயங்கியது.

இதில் 1,200 பெண்கள் இருந்தனர். “தற்கொலைப்படை” ஒன்றும் இயங்கியது. இவர்கள், முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, எதிரிப்படைகளின் டாங்கிகள் அணிவகுத்து வரும்போது, பாய்ந்து சென்று குறுக்கே படுத்துக்கொள்வார்கள். டாங்கிகளால் அவர்கள் நசுக்கப்படும் அதே நேரத்தில், குண்டுகள் வெடித்து டாங்கிகள் சின்னாபின்னமாகச் சிதறும்! இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்தனர்.

“டெல்லி சலோ!” என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது. “ஜான்சிராணிப்படை” பல மைல்கள் முன்னேறியது. அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. “விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்” என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால்…
நேதாஜி போன விமானம் மாயமாய் மறைந்தது

போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா குதித்ததும், போரின் போக்கே தலைகீழாக மாறியது. வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின்வாங்கின. அமெரிக்க தளபதி மக்ஆர்தர், பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கிக் கொண்டிருந்தார்.

1945 ஏப்ரல் 30-ந்தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப்படைகள் முற்றுகையிட்டன. இனி தப்ப வழி இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, ஜெர்மனி சரண் அடைந்தது.

ஜெர்மனி சரண் அடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை. எனவே, 1945 ஆகஸ்ட் 6-ந்தேதி ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகி மீது வீசியது. இதைத்தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 12-ந்தேதி, ஜப்பான், தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடையத் தீர்மானித்தது.

அப்போது நேதாஜி மலேயாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கப்பூர் திரும்பினார். சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். 1945 ஆகஸ்ட் 15-ந்தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று, ராணுவத் தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். முக்கியமாக, “ஜான்சி ராணிப்படை”யில் உள்ள பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். இதற்கிடையே, ஜப்பான் அரசிடமிருந்து, நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது.

“ரஷியா வசம் இருக்கும் மஞ்சூரியா பகுதிக்கு உங்களை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. அதன்படி அடுத்த நாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும், அங்கிருந்து மஞ்சூரியாவுக்குப் புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார்.

1945 ஆகஸ்ட் 16-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு செய்திகளை வெளியிட்டார். முதலாவது செய்தி, இந்திய தேசிய ராணுவத்தினருக்கு. “ஜப்பான் சரண் அடைந்துவிட்டாலும், டெல்லியை அடையப் பல வழிகள் இருக்கின்றன. இந்தியாவை மீட்பதுதான் நமது லட்சியம்” என்பதே அந்தச் செய்தி. அடுத்த செய்தி, கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு. “நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளராதீர்கள். இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரம் அடையும். ஜெய்ஹிந்த்.”

இந்தச் செய்தியை வெளியிட்டு விட்டு, காலை 10 மணி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய்ச்சேர்ந்தார். அதன் பின்னர் மின்னல் வேகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-1945 ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரிலிருந்து, சைகோன் (தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். துணைத்தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித் ஹசன் (நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது உடன் இருந்தவர்) ஆலோசகர் தேவநாத் தாஸ், நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரசார இலாகா மந்திரியாக பதவி வகித்த எஸ்.ஏ.அய்யர் (தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.

ஆகஸ்ட் 18 காலை 10 மணி: விமானம் சைகோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு ஜப்பானிய போர் விமானம் ஒன்று புறப்படத்தயாராக இருந்தது. அதில் ஒருவருக்கு மட்டும் இடம் இருக்கிறது என்றும், நேதாஜி மட்டும் வரலாம் என்றும், விமானத்தில் இருந்த ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா, வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார். சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகள் கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது.

அந்தப் படைகளிடம் சிக்கினால் தன்னைக் கைது செய்வது நிச்சயம். போர்க் கைதியாகப் பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை. எனவே, விமானத்தில் போவதே மேல் என்று முடிவு செய்தார். விமானத்தில் ஏறி அமர்ந்தார். கடைசி நேரத்தில், “இன்னொருவர் வரலாம்” என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். எனவே ஹபிப்-வுர்-ரகிமான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து நேதாஜி “ஜெய் ஹிந்த்” என்று கூறினார். விமானம் புறப்பட்டது. அது எந்த இடத்துக்குப் போகிறது என்று அறிவிக்கப்படவில்லை. நேதாஜியின் கடைசி விமானப் பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை.

ஆகஸ்ட் 19-ந்தேதி, ஜப்பான் ரேடியோ “நேதாஜி இறந்துவிட்டார்” என்ற திடுக்கிடும் செய்தியை அறிவித்தது.

ஜப்பானிய ரேடியோ கூறியதாவது:-”சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தின் தலைவரான நேதாஜி, 1945 ஆகஸ்ட் 16-ந்தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார். 18-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு, பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார். அவருடன் விமானத்தில் பயணம் செய்த ஜெனரல் சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்டவுடனேயே மரணம் அடைந்தார். நேதாஜியின் உதவித் தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமானும், மற்றும் 4 ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர்” இவ்வாறு ஜப்பானிய ரேடியோ அறிவித்தது.

இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும், முத்துராமலிங்க தேவர் உள்பட பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956-ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை.

டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான்” என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967-ல், 350 “எம்.பி.”க்கள் கையெழுத்திட்டு, நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும்படி, ஜனாதிபதியிடம் மனு கொடுத்தனர். அதன்படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்

வீர விளக்கு வ.வே.சுப்பிரமணிய ஐயர்

இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளருமான வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், வேங்கடேச ஐயர் - காமாட்சி தம்பதியினருக்கு மகனாக திருச்சிராப்பள்ளி வரகனேரியில் 1881 ஏப்ரல் 2 ஆம் நாள் பிறந்தார்.

தூயவளனார் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றுப் பின்னர் சென்னை சென்று ப்ளீடர் (வக்கில்) பரிட்சையில் முதல் பிரிவில் தேறி, ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த “அபிநவபாரத்” சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. இச்சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார்.

1909இல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். இதனால் வ.வே.சு உட்பட பலரும் தலைமறைவாயினர்.

லண்டனில் இருந்த வ.வே.சு மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சுற்றிவிட்டு, 1910இல் இந்தியா வந்து புதுச்சேரியில் தங்கினார். இங்கு பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி, வ.ரா. அரவிந்தர் போன்றவர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராட முன்வந்தார். இங்கு “தர்மாலயம்” என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். அவரால் இங்குப் பயிற்சிக் கொடுக்கப்பட்டவர் தான் கலெக்டர் ஆஷை கொன்ற வாஞ்சிநாதன். ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது.

1920ல் பொது மன்னிப்புப் பெற்று வ.வே.சு திருச்சிராப்பள்ளி வந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரகனேரி இல்லம் வந்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். 1920இல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். இராஜதுவேஷ குற்றம் சாட்டப்பட்டு பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து பின்னர் விடுதலையானார். 1922இல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தையும் அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924இல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார்.

மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார். கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார். மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, கம்பராமாயணம் ஓர் ஆராய்ச்சி போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் “லண்டன் கடிதம்” என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார். இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜுன் 4ல் அணைந்தது

சு. முருகானந்தத்தின் நடந்தாய் வாழியிலிருந்து

அறிஞர் : புரட்சியாளர் வ.வே.சு.ஐயர்

Posted by revathi on 2005/3/8 11:35:19 (41 reads)

வ.வே.சு ஐயர் கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் அழகான கருப்பு தாடி; அன்பு ஒழுகும் கண்கள்; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி; குளிர்ந்த பார்வை; உண்மை முனிவரின் தோற்றம்; நிமிர்ந்த நடை, ஒரு தனி அழகு கொண்டது; நடப்பதற்கும் நடை என்று பெயர் ஒழுக்கத்திற்கும் தமிழில் நடையென்று பெயர்; இரண்டிலும் சாலச் சிறந்தவர் வ.வே.சு ஐயர்.

வரகனேரி வெங்கடேச சுப்பிரமணிய ஐயர் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப் பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881இல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ.தேர்ச்சி கண்டு, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தார். சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) தேறினார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார்.

அவர், தம் பன்னிரண்டாம் வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் பி.ஏ. படித்து முடித்த பின்னர், சென்னை மாநகர் வந்து சட்டம் பயின்றார். வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907இல் வ.வே.சு.ஐயர் ரங்கூன் வழி இலண்டன் ஏகினார்.

இலண்டனில் தீவிர தேசிய இயக்கவாதியான விநாயக தாமோதர சாவர்க்கரின் அறிமுகம் ஏற்பட்டது. சியாம் கிருஷ்ணவர்மா, விபின் சந்த்ரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். தேசிய இயக்கத்தை ஒரு கண்ணாகவும், பாரிஸ்டர் கல்வியை மற்றொரு கண்ணாகவும் கொண்டிருந்தார். இலண்டனுக்கு 1908இல் வந்த காந்தி அண்ணலைச் சந்தித்தார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் “இந்தியா” பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

இலண்டன் “இந்தியா விடுதி” (India House)யில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். புரட்சி இளைஞர் களுக்கும் அப்பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சியாளராக விளங்கிய மதன்லால் திங்க்ரா, 1909இல் கர்ஸன் வைலியைச் சுட்டுக் கொன்றார்.

திங்க்ராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.

திங்க்ரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். பாரிஸ்டர் தேர்வு கண்ட வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். அதையொட்டி அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சாவர்க்கரை வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சுவை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர்போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது.

1910 அக்டோ பர் 9ஆம் நாள் வ.வே.சு.ஐயர் புதுச்சேரி வந்தார். மண்டயம் ஸ்ரீ நிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார் ஆகியோருடன் இணைந்தார். இங்கும் வ.வே.சு.ஐயர் ஓஇந்தியாஔவில் தொடர்ந்து எழுதி வந்தார். பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.

கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. ஐயர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

முதல்உலகப் போரின்போது, வ.வே.சு.ஐயரை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. இப்போது அவருக்குக் காந்தியாரை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். ஓதமிழ்த்தென்றல்ஔ திரு.வி.கலியாண சுந்தரனார் தேசபக்தன்ஒ இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஐயர் ஏற்றார். ஆனால் தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டிப் பிரட்டிஷார் அவரைப் பெல்லாரி சிறைக்கு அனுப்பினர்.

ஒன்பது திங்கள் சிறையிருந்த அவர், “கம்பராமாயண ஆராய்ச்சி” எனும் அரிய நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

சிறை விடுதலைக்குப் பின்னர், சேரன்மாதேவியில், 1923இல் “தமிழ்க்குருகுலம்”-”பாரத்வாஜ ஆசிரமம்” தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.

இம்மையத்தை அடுத்த, வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கும் அளித்தார். “சங்கேத பாஷை”யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.

இலக்கியவாதியாக விளங்கிய இந்த அரசியல்வாதி தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். அங்கு அவரும் அவர் மகள் சுபத்திரையும் எதிர்பாராது அருவியில் கால் வழுக்கி விழுந்து அமரத்துவம் எய்தினர்.

மொழியார்வம், முதிர்ந்த நாட்டப்பற்று, முனிவர்க்குரிய மனப்பக்குவம், வீரனுக்குரிய வேகம், நியாயவாதியின் நிதானம், நேர்மையாளர்க்குரிய நெஞ்சுரம், பழைமையில் பக்தி, புதுமையில் ஆர்வம், தொண்டுணர்வு, தியாக சிந்தை ஆகியவற்றின் முழு வடிவமாக விளங்கியவர் வ.வே.சு ஐயர். அவரது வாழ்க்கையே ஒரு வீர காவியம். அந்த இலக்கியவாதி தம் படைப்புகளின் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

New Page 2