சோழர் வரலாறு

March 15, 2006

சோழர் வரலாறு

சோழர்களது நீண்ட வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. சங்க இலக்கிய காலம்.

2. சங்ககால இறுதிக்கும் விஜயாலய அரசமரபின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலம்.

3. விஜயாலயனுடைய மரபு புகழ்பெற்று விளங்கிய காலமான கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதலான காலம் (இதில்தான் இராஜராஜன் இராஜேந்திரன் வருவார்கள்.)

4. சாளுக்கிய-சோழ குல மன்னன் முதலாம் குலோத்துங்கனும் அவனது பின்னோரும் புகழ்பெற்று விளங்கிய கி.பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான காலம்.

நாம் இதில் முதல் பகுதியான சங்க இலக்கிய காலத்தைப் பற்றி முதலில் பார்ப்போம். ஆதாரமாக நான் வைத்து எழுதிக் கொண்டிருப்பது, சோழர்கள், பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதியது, தமிழில் மொழிபெயர்த்தது, கே.வி.ராமன்.

முதலாம் பராந்தகன் (கி.பி. 907 - 955)

திருப்புறம்பயம் போரின் போது, தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.

இவனுக்குப் பிறகு அரியணைக்கு வந்த பராந்தகன் என்றழைக்கப்படும் முதலாம் ஆதித்தனின் மகன், சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே “மதுரை கொண்ட” என்ற விருதை அவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரி வரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும் சேரமன்னன், நெருங்கிய நண்பனாகவும் கருதப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து (மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழ- பாண்டியப் போரில் மூன்று கட்டங்களைப் பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.

ஈழப்போர்:

தான் புதியதாக வெற்றி கொண்ட பகுதிகளைத் தன் அதிகாரத்தை ஏற்குமாறு செய்யும் பணியில் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று எண்ணிய பராந்தகன், தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால் (பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால் பராந்தகன் நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 945-953) இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்.

இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டுகளைப் பற்றியதாகவே இருக்க வேண்டும். மறக்கப்படாமலிருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்குப் பிறகு, இவனது பலம் வாய்ந்த வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் மாற்றப்பட்டது (அதாவது பழிவாங்கப்பட்டது).

பராந்தகனின் நண்பர்கள்:

கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத் தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.

கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கே-வேளிர் என்பவரின் மகள் பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.

ஆட்சிக் காலம்:

முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச் செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அதுமுதல் பராந்தகன் தன் ஆட்சிக் காலம் முழுவதும் வெற்றி மேல் வெற்றி பெற்று பீடுநடை போட்டான். தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில் இவன் பாண்டியர்களின் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரி வரை பரவச் செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான், ஆனால் இம்முயற்சியில் இவனது குறிக்கோள் வெற்றியடையாததை முன்னர் பார்த்தோம். ஏனைய இடங்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன் கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.

எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது; பராந்தகனின் நாடு, வடக்கே நெல்லூர் வரை பரவியது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரழந்ததோடு, இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இதுமுதல் புகழ்மிக்க முதலாம் இராஜராஜன் கி.பி. 985ல் அரியணையில் அமர்ந்தது வரையிலான முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

தக்கோலப்போர்

இதுவும் சோழ வரலாற்றில் ஒரு முக்கயமான போர் என்பதால் விரிவாகப் பார்ப்போம்.

பிரதிவீபதியின் மரணம்:

சுமார் கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது. பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக் கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.

இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன் (இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரிய வாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.

இராஜாதித்தன்:

திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராஜாதித்தன் தலைமையில் யானைப் படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக் கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான்.

வாணர், வைதும்பர் ஆகியோருக்கு எதிராக, தான் கடைப்பிடித்த ஆக்கிரமிப்புக் கொள்கையின் விளைவுகளைப் பற்றி கவலையுற்ற பராந்தகன், இரண்டாம் பிரதிவீபதியிடம் மட்டும் இந்தப் பொறுப்புகளை ஒப்படைக்காமல் பல எச்சரிக்கை நடவடிக்கைகளை, தானே மேற்கொண்டான். இத்தகைய ஏற்பாடுகள் பல ஆண்டுகளாகப் பராந்தகனின் நாட்டைப் பாதுகாத்து வந்தது. ஆனால் கி.பி. 949ல் பல காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தப் படையெடுப்பு தக்கோலத்தில் பெரும்போரில் முடிவுற்றது.

தக்கோலத்தில் மூவடி சோழ இராஜாதித்தனுடன் பொருது அவனைக் கொன்று கன்னரதேவன் வெற்றி கொண்டதாக, ஆதகூர் கல்வெட்டு கூறுகிறது. பூதகனது இந்த வீரச்செயலைப் பாராட்டும் வகையில் கிருஷ்ணன் அவனுக்கு வனவாசி 12,000 பெல்வோலோ 300 என்ற பகுதிகளை வழங்கினான். இதை சோழர்களின் சான்றுகளை ஒப்புகின்றன.

இப்போரில் வெற்றி பெற்றாலும் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு மறைந்துவிடவில்லை. இன்னும் பல ஆண்டுகள் இம்மன்னன் கடும் போர் புரிய வேண்டிய நிலையில் இருந்தான். கிருஷ்ணனின் படையெடுப்பால் சோழ நாடு சிதறுண்டது. வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக, பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான் என்பது திண்ணம். சோழப் பேரரசு வீழ்ச்சியுற்றது; அதற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டிய நிலையை அடைந்தது.

பராந்தகன் ஆட்சியின் முடிவு:

பராந்தகனது ஆட்சியின் இறுதி ஆண்டுகளைப் பற்றி தஞ்சையை அடுத்துள்ள இடங்களிலிருந்து கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். இதைக்கொண்டு இம்மன்னன் 48-ம் ஆட்சி ஆண்டு வரை உயிர்வாழ்ந்தான்.

இம்மன்னன் பல மனைவியரை மணந்திருந்தான், இவர்களில் பதினொருவருடைய பெயர்கள் கல்வெட்டுகளில் இடம் பெறுகிறது. இராஜாதித்தனைத் தவிர, பராந்தகனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். கண்டராதித்தன், அரிகுலகேசரி, உத்தமசீலி, அரிந்திகை அல்லது பட்டயங்களில் காண்பது போல அரிஞ்சயன் என்பவராவர். பராந்தகன் சிறந்த சிவ பக்தன் என்று திருவாலங்காட்டுப் பட்டயம் சொல்கிறது. முதலாம் ஆதித்தனால் மேற்கொள்ளப்பட்ட கோயில் எடுப்பிக்கும் பணி இவனது காலத்தில் சிறந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

இதனுடன் முதலாம் பராந்தகனின் வரலாறு முடிவுறுகிறது. அடுத்து முதலாம் பராந்தகனின் மறைவிலிருந்து (கி.பி. 955) முதலாம் இராஜராஜன் அரியணையேறும் வரையிலான காலத்தைப் பற்றி பார்க்கலாம் (கி.பி. 985).
இரண்டாம் பாகம்: சங்ககால இறுதிக்கும் விஜயாலய அரசமரபின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலம்.

சங்க காலத்திற்குப் பிறகு, ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்குக் கடுங்கோன் வழிவந்த பாண்டியர்களும், சிம்மவிஷ்ணு வமிசத்துப் பல்லவர்களும் எவ்வாறு தமிழ்நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டு ஆட்சி புரிந்து வந்துள்ளனர் என்பது புதிராகவே உள்ளது. இதுபோன்று அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் அதாவது ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் விஜயாலயன் ஆட்சிக்கு வரும்வரை சோழ மன்னர்களின் வரலாறு இருள் சூழ்ந்ததாக உள்ளது.

இந்நீண்ட இடைக்காலத்தில் இப்பெரிய ஆட்சிகளில் ஏற்பட்ட மாறுதல்களைப் பற்றிக் கல்வெட்டுகளிலிருந்தும் இலக்கியத்திலிருந்தும் ஒருவாறு அறிந்து கொள்கிறோம். சோழநாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு வடக்கிலும் தெற்கிலும் பல்லவர்களும், பாண்டியர்களும் வலுப்பெற்றப்போது, சோழ அரச குடும்பத்தைச் சேர்ந்தோர் வெற்றிபெற்ற தம் பகைவரிடமும் பணிபுரிந்ததோடு அவர்களது உரிமைகளையும் பெற்று வந்தனர். இத்தகைய நிகழ்ச்சி, இந்திய வரலாற்றில் சர்வசாதாரணமாக ஏற்பட்ட ஒன்றாகும்.

ராஷ்டிரக்கூடரின் எழுச்சியின் போது மேளைச்சாளுக்கியரும், இராஜராஜன் காலத்துக்கும் வேங்கியைக் கைப்பற்றிய முதலாம் குலோத்துங்கன் சோழ அரியணையில் ஏறுவதற்குமிடையே கீழைச் சாளுக்கியரும், பாண்டியரும், பல்லவர்களும், கங்கர்களும், பாணர்களும், விஜயாலயன் ஆட்சிக்குப்பின் தம் பகைவரிடம் பணிபுரிந்ததற்கான பல சிறந்த எடுத்துக்காட்டுக்களில் ஒரு சிலவாகும்.

களப்பிரர்கள்:

நாட்டில் பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்த தெளிவற்ற ஒரு குலத்தைச் சார்ந்த களப்பிரர்களைப் பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப் பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.

இவர்களில் குறிப்பிடுதற்குரிய ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன். கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பெருங்காலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகர் இவனைப் பற்றிய சில பாடங்களை மேற்கோள் காட்டியுள்ளார். இம்மன்னன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.

சோழர்களின் வீழ்ச்சி:

அச்சுதனின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு (எவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு என்பதை அறுதியிட்டுக் கூற இயலாது), களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும், பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப் பகுதிகளஇல் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணந்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.

தமிழ்நாட்டில் சோழர்கள்:

இந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த சோழ மன்னர்களைப் பற்றி நம்மால் அறிய முடியவில்லை, இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவேரிக் கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்று முக்கியமுள்ள செய்திகளைத் தரவில்லை.

இதன் காரணமாக கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைச் சுற்றி நீண்டதோர் இருண்ட காலம் சூழந்து கொள்வதை அறிகிறோம். இக்காலத்தில், கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் என்ற நிலையில் இருந்தனர் என்றே கூறலாம். நாம் இப்பொழுது அறிந்துகொள்ள முடியாத விதத்தில் அவர்கள் தங்களுக்கென்று ரேனாட்டுப் பகுதியில் இரண்டாம் புகலிடத்தைத் தேடிக் கொண்டனர். பழைய நாட்டிலோ, தமக்கெதிராக ஏற்பட்ட, ஒவ்வொரு புயலுக்கும் வளைந்து கொடுத்து, தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வெற்றிபெற்ற மன்னர்களுடன் தம் சந்ததியினருக்குத் திருமணங்கள் செய்து வைத்தும், அக்காலத்திய சமய இயக்கங்களை ஊக்குவித்தும், தம் அரசியல் செல்வாக்கை வளர்க்கப் பாடுபட்டனர்.

விஜயாலயனின் எழுச்சி முதலாம் ஆதித்தன் (கி.பி. 850 - 907)

திருப்புறம்பயம்:

தென்னிந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருந்த இந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம் வசப்படுத்தினர். இவர்களே செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று செந்தலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர்களும் சோழர்களைப்போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்புகொள்ள வேண்டியிருந்தது. தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை முத்தரையர் மாற்றிக் கொண்டனர் என்பதை இவர்களது கல்வெட்டுகளும் விருதுகளுமே விளக்குகின்றன.

வரகுண மன்னன் காலத்தில், தாமாகவோ அல்லது வரகுணனின் முயற்சியாலோ இவர்கள் தம் முழு ஆதரவையும் பாண்டியர்களுக்கு அளித்தனர். இதன் விளைவாக, பல்லவர்களின் உரிமைகளைக் காக்கும் பொருட்டுச் செயல்பட்ட விஜயாலயனிடம் தஞ்சையை இழக்கலாயினர். தம் அதிகாரத்திற்கு உட்பட்ட சோழமன்னனை இச்செயலில் இறக்கியது, “புலிக்குட்டியை வளர்த்து, இரத்தத்தை சுவைபார்க்க வைத்தது போலாகும்” என்று பல்லவ மன்னன் சிறிதும் சிந்திக்கவில்லை. விஜயாலயனும், இவ்வெற்றியே இந்திய வரலாற்றில் காணப்படும் ஒரு பேரரசை நிறுவுவதற்கான மிகச்சிறப்பான தொடக்கம் என கனவுகூடக் காணவில்லை.

விஜயாலயனது வெற்றி, பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் நண்பர்களான முத்தரையரின் பலவீனத்தையே காட்டியதால், சமநிலையை மீண்டும் நிலைநாட்டும் பொருட்டு, பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வடகரையிலுள்ள இடவை என்னுமிடத்தை அடைந்தனர். இந்த நிகழ்சிக்குச் சற்று முன்பே நிருபதுங்க வர்மனுக்கு (பல்லவ மன்னன்) அடுத்த மன்னனான அபராஜிதன் கங்க மன்னன் முதலாம் பிரதி வீபதி உள்ளிட்டுத் தன் நண்பர்களைக் கூட்டி, பாண்டியர்களை முறியடிக்க வேண்டிய பெரும் முயற்சியை மேற்கொண்டான். திருப்புறம்பயத்தில் நடந்த பெரும் போரில், விஜயாலயனை அடுத்து ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனும் அபராஜித மன்னனுடன் இருந்து போரிட்டான்.

பல்லவர்க்கும் கங்க மன்னர்களுக்கும் இடையில் தொன்றுதொட்டு நட்பு ஏற்பட்டிருந்தாலும், இப்போரில் கங்கமன்னன் உயிர்நீத்ததால், போரில் கிடைத்த வருவாயின் பெரும் பங்கை ஆதித்தனே பெற்றான். ஆதித்தன், போரில் தனக்கு உதவியதற்கான நன்றிப் பெருக்கால், முத்தரையரிடமிருந்து முன்னால் ஆதித்தன் தந்தை விஜயாலயனால் எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளையும் அபராஜித்தன், ஆதித்தனுக்கு அளித்தான். திருப்புறம்பயம் போரில், ஆதித்தன் பெரும்பங்கை ஏற்காவிடினும், தனக்கு அனுகூலமாக அமைந்த சூழ்நிலையை அறிந்து தன் உயர்வுக்காகத் தன் பலத்தை விரைவிலேயே பயன்படுத்தத் தொடங்கினான். முதலாம் பிரதிவீபதியின் கடைசி ஆண்டு, கி.பி. 879 ஆகத்தெரிகிறது. எனவே இதே ஆண்டில்தான் இவன் உயிர்விட வேண்டி நேர்ந்த திருப்புறம்பயம் போரும் நடைபெற்றிருக்க வேண்டும்.

இதிலிருந்து முதலாம் ஆதித்தன் கி.பி. 870-லிருந்து கி.பி. 907 வரை, ஏறத்தாழ 36 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என அறிய இயலுகிறது. கி.பி. 850 அளவில் தொடங்கிய விஜயாலயனது ஆட்சி, கி.பி. 870-ம் ஆண்டு அளவில் முடிவுற்றது என்றும் இதிலிருந்து அறியலாம்.

முதலாம் ஆதித்தன்:

சஹுயாத்திரி மலைத்தொடரிலிருந்து பரந்த கடல் வரையுள்ள பகுதிகளில், காவிரியாற்றின் இரு கரைகளிலும், தன் வெற்றிச் சின்னங்களாகச் சிவபெருமானுக்கு வரிசை வரிசையாக வானோக்கி பல கோயில்களை எடுப்பித்தான் என்று ஆதித்தனைப் பற்றி (கி.பி. 871-907) அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன. பலம் மிக்க பல்லவ மன்னன் அபராஜிதனைத் தோற்கடித்து, அவனது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. கோதண்டராமன் என்னும் சிறப்புப் பெயரை இவனுக்கு இடுவதோடு, ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் மீது பாய்ந்து அவனைக்கொன்றான் என்றும் கன்னியாக்குமரிக் கல்வெட்டு கூறுகிறது.

தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு இராஜகேசரி தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான் எனத் தெளிவாகக் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும். இதை வைத்து இவன் கி.பி. 890-ல் தான் பல்லவர்களைத் தோல்வியுறச்செய்து, அந்நாட்டைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும்.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட தொண்டை மண்டலப் பகுதியில் அமைதியை ஏற்படுத்த சில ஆண்டுகள் தேவைப்பட்டதோடு, பல புதிய படையெடுப்புக்களுக்கும் காரணமாயிற்று. இவ்வெற்றிகளில் கங்க மன்னன் உதவியிருக்கக்கூடும், இது எவ்வாறு இருப்பினும் விரைவிலேயே கங்கை மன்னன், ஆதித்தன் தலைமையை ஏற்றான்.

தஞ்சாவூர்-பட்டணத்தில் முடிசூட்டிக் கொண்டபின் ஆதித்தன் கொங்கு தேசத்திற்கு வந்து, இந்நாட்டை வெற்றிகொண்டு, தன்னாட்டுடன் சேர்த்து ஆட்சிசெய்தான் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது.

இவன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தன் நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது.

மறைவு:

சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டைமானாடு என்னுமிடத்தில் ஆதித்தன் இறந்தான். இவனது மகன் பராந்தகன், இறந்த இடத்தில் கோதண்ட இராமேசுவரம் என்றும் ஆதித்தீசுவரம் என்றும் அழைக்கப்பட்ட கோயிலை எடுப்பித்தான். பராந்தகனைத்தவிர, ஆதித்தனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தான்.

இத்துடன் விஜயாலயன் மற்றும் முதலாம் ஆதித்தனின் வரலாறு முடிகிறது. அடுத்து முதலாம் பராந்தகனைப் பற்றிப் பார்க்கலாம்.

காவிரி:

காவிரியின் பெருமையைப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் புகழ்ந்து பாடுகின்றன. சூரிய புத்திரர்களுக்காகவும் காந்தமன் என்ற மன்னனின் வேண்டுதலுக்காகவும் அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிறந்ததே இக்காவேரி நதி என்று கூறப்படுகின்றது. நீதியைப் பேணி வளர்த்த சோழ மன்னர்களின் குலக்கொடியாக விளங்கிய காவிரி, நீண்ட வறட்சிக் காலங்களிலும் அவர்களைக் கைவிடவில்லை. ஆண்டுதோறும் மழை பெய்து, காவிரியாறு பெருக்கெடுத்து ஓடும்போது மன்னன் முதல் சாதாரண உழவன் வரை சோழநாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாக் கொண்டினார்கள்.

சோழர்கள் காலம்:

தென்னிந்திய வரலாற்றில் மிகவும் படைப்பாக்கம் நிறைந்த காலப்பகுதி சோழர் காலமாகும். அக்காலத்தில் முதன் முதலாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. புதிய சூழ்நிலைகள் தோன்றியபோது ஆட்சிமுறைச் சிக்கல்களைச் சமாளிக்கவும் தீர்க்கவும் சோழர் காலத்தில் அக்கறையுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளூர் ஆட்சிமுறை, கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் பிற்காலங்களில் மீண்டும் அடைய இயலாத ஒரு பொற்காலத்தை, ஒர் உயர்வைத் தமிழ்நாடு இக்காலத்தில் பெற்றது. வெளிநாட்டு வாணிகம், கடலக வாழ்வின் செயல்முறைகள் ஆகியவற்றைப்போல, முன்சொன்ன துறைகளிலும் ஏற்கனவே பல்லவர்கள் காலத்தில் தொடங்கப்பெற்ற இயக்கங்கள், சோழர் காலத்தில் முழுமை பெற்றன.

சோழர் என்னும் பெயர்:

சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை; சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. இது மரபுவழிச் செய்தி; வரலாற்று ஆதாரமற்றது. இது எவ்வாறாயினும் சோழ அரச மரபின் மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர்.

இலச்சினைச் சின்னம்:

சோழர்களின் இலச்சினை அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப் பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

பண்டைய இலக்கியங்களின் தன்மை:

சங்க இலக்கியங்களிலிருந்து நாம் பண்டைய சோழர்களைப் பற்றித் தெளிவாக அறிய முடிகிறது. இவ்விலக்கயங்கள் கிறித்துவ சகாப்தத்தின் முதற்சில நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன என்பது பொதுவாக எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விலக்கியங்களின் கால வரையறையை இவற்றில் கிடைக்கும் குறிப்புகளைக் கொண்டு அறுதியிட்டுக் கூற இயலவில்லை. இதுவே இக்காலத்தின் வரலாற்றைத் தொடர்ச்சியாக எழுதத் தடையாக உள்ளது. அரசர்கள், இளவரசர்கள் ஆகியோரின் பெயர்களும், இவர்களுடைய புகழ்பாடிய புலவர்களின் பெயர்களும் நமக்குக் கிடைக்கின்றன. விஜயாலயச் சோழர்களின் காலம் உறுதியாக்கப்பட்ட பிறகு, இலக்கியத்தின் மெய்யான இயல்பும் உறுதியும் குலைந்து, அரண்மனைகளில் வீற்றிருக்கும் தனி மனிதர்களின் புகழ்பாடும் பாக்களாக அது குறைந்துவிடுகிறது.

இருபெரும் மன்னர்கள்:

சங்க இலக்கியங்கள் கூறும் சோழ மன்னர்களுள் இரு பெருவேந்தர் சிறந்து விளங்குகின்றனர். இவர்களது நினைவு பல பாடல்களிலும், கற்பனைக் கதைகளிலும் பிற்காலத்தில் போற்றப்படுகிறது. கரிகாலனும் கோச்செங்கணானுமே இவ்விருவர்.

இவ்விருவருள் முன்னால் வாழ்ந்தவர் யார்? இவர்களுக்கிடையே நிலவிய உறவு யாது? இவர்களுக்கும், இவர்கள் காலத்தில் வாழ்ந்த மற்ற மன்னர்களுக்கும், குறுநில மன்னர்களுக்கும் இடையே நிலவிய உறவு எத்தகையது? என்பது போன்ற குறிப்புகள் நமக்குத் தெளிவாகக் கிடைக்கவில்லை. புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம் கரிகாலன் காலத்தில்தான் சிறப்பில் உயர்வு பெற்றதெனில், உறையூரில் ஒன்றும் புகாரிலும் மற்றொன்றுமாகத் திகழ்ந்த சோழகுலத்தின் கிளைகள் இரண்டுக்கும் இடையே ஏற்பட்ட உட்பூசல், கரிகாலன் ஆட்சிக்குப் பிறகே தோன்றியிருக்க வேண்டும்.

சங்ககால மன்னர்களைப் பற்றி ஆராயுமுன், சங்க இலக்கியத்தில் இவர்களைப் பற்றி காணப்பெறும் செவிவழிக் கதைகளை பார்ப்போம். பசுவின் கன்றுமீது தேரினை ஏற்றிக் கொன்ற தன் மகனுக்கு மரண தண்டனை அளித்த மன்னனையும் பருந்திடமிருந்து புறாவினைக் காத்த மன்னனையும் பற்றி இவ்விலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால் சிபி, மனு ஆகியோர் பெயர்கள் இவற்றில் கூறப்படவில்லை. புறாக்கதையில் கூறப்படும் மன்னனே செம்பியன் என்பவனாவான். இக்கதைகளுள் கன்றுக்குட்டி, இளவரசன் ஆகிய கதைகள் சங்க இலக்கயத் தொகை நூல்களில் காணப்படவில்லை; ஆனால் முதல்முறையாக சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக்காப்பியங்களில் காணப்படுகின்றன.

கரிகாலன்

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்கு, கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப் பெற்றபோது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.

“வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்
குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்து
பீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழி
கொன்று யானை பிடிபுக்காங்கு” (பட்டினப்பாலை 220-228)

“நுண்ணுதி னுணர நாடி நண்ணார்
செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்
துருகெழ தாப மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்வான்” (பட்டினப்பாலை 220-228)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளிருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக் கூடங்களில் வாழ்ந்தபோது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது. ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு பின் சிறைக் காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். இதைக் கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார்.

இவனது படைபலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப் பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாகக் கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியார் அவரது காலத்தில் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக் கதைகள்:

பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பாடோ செய்து கொண்டான். காவிரியாற்றின் கரைகளை உயர்த்திக் கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன்முதலாகக் காண்கிறோம்.

சமயம்/இறப்பு:

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத் துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

அடுத்து சோழர் பரம்பரையில் இருந்த கிள்ளி மன்னர்கள் (கில்லியில்லை கிள்ளி), நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன், பெருங்கிள்ளி ஆகியோர் பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.

நலங்கிள்ளி

புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களைப் பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப் போன்று நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.

அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப் பின்னேவர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக் குடை முழுநிலாப் போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடை போட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்க வல்லவை; உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினூடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப் படை, கீழைக் கடற்கரையில் புறப்பட்டால் மேலைக் கடற்கரை வரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண் துயிலாது இருக்கின்றனர். (புறம்.)

தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலைநாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.

பெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது, ஆதலால் உங்களில் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று; ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த் தவிர்த்தலே உமக்கு நல்லது (புறம். 45)

இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும் என்பதை அறிகிறோம்.

இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.

நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக் கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என் நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஒப்புவித்துவிடுவேன்; கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியை எழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக. (புறம். 73)

நெடுங்கிள்ளி

நலங்கிள்ளிக்கு எதிராகப் போர் புரிந்த நெடுங்கிள்ளியைப் பற்றி, இவ்விருவரையும் சமாதானப்படுத்த முயன்று கோவூர்க்கிழார் பாடிய இரு பாடல்களில் காண்கிறோம். உறையூரை நலங்கிள்ளி, முற்றுகையிட்டு அங்கு நெடுங்கிள்ளியை சிறை வைத்தான் என்று ஒரு பாடல் கூறுகிறது. கீழ்க்காணும் இப்பாடல் இம்முற்றுகையின் விவரங்களை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

உறையூரில் கோட்டைக்கட்டி ஆளும் நெடுங்கிள்ளியே, உன் கோட்டையை நலங்கிள்ளி முற்றுகையிட்டிருக்கிறான். நீயோ அதைப் பொருட்படுத்தாமல் உன்னுடைய கோட்டைக்குள் கவலையின்றி இருக்கிறாய். இது கோழையின் செயல்; வீர அரசர்களுக்கு ஏற்குமா? ஒன்று கோட்டையை விட்டு வெளியே வந்து அவனுடன் போரிடுக; அல்லது அவனுடன் சமாதான உடன்பாட்டைக் காண்க; இரண்டும் கெட்டான் நிலையில், மக்கள் துன்பப்பட்டுகிறார்கள். யானைகள் உணவின்றி தவிக்கின்றன. பெண்டு பிள்ளைகள், குழந்தைகள் எல்லாம்கூட பட்டினியால் தவிக்கின்றனர். உன் ஆட்சிக்கு இதெல்லாம் இழுக்கு அல்லவா? நீயாகிலும் ஆட்சி செய்; அல்லது அவனையாகிலும் ஆளவிடு. (புறம். 44)

நலங்கிள்ளியின் பகுதியிலிருந்து உறையூருக்குள் வந்த இளந்தத்தன் என்ற ஒரு புலவரை ஒற்றர் எனக்கருதி, அவரைத் தூக்கிலிட இவன் உத்தரவிட்டான். ஆனால் அங்கு இருந்த கோவூர்க்கிழாரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. இது சங்ககாலப் புலவர்களின் வாழ்க்கை முறையை தெரிவிக்கிறது.

இளந்தத்தன் என்ற புலவர், நலங்கிள்ளியிடம் பரிசில் பெற்ற பிறகு, நெடுங்கிள்ளியிடம் பரிசல் பெற வருகிறார். நலங்கிள்ளியிடமிருந்து வருவதால் புலவர் ஒற்றராக இருக்கலாம் என்று அச்சப்படுகிறான் நெடுங்கிள்ளி. ஐந்தாம் படைப் பேர்வழிகளைப் போல அவரைக் கொன்றுவிடவும் முடிவு செய்கிறான். இது தகுமோ? புலவர் ஒற்றர் அல்லர், அவர்கள் வறுமையால் வாடுபவர்கள், பழுத்த மரத்தை நாடிச்செல்லும் பறவைகள் போல, வள்ளல்களைத் தேடிச்செல்வது அவர்களுடைய இயல்பு. பொருள்பெற்று, சுற்றத்தை வாழ வைக்க வேண்டியது புலவர் கடமை. அவர்கள் ஒரு நாளும் பிறருக்குத் தீங்கு இழைக்க மாட்டார்கள். தங்களை இகழ்ந்தார் நாணும்படி நடந்து கொள்வர். மண்ணை ஆளும் அரசர் போல அவர்களும் தலைமையே விரும்புவர்.

கிள்ளிவளவன்

நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப் பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான்.

இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத் திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்கு மிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார்.

சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச் சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக் குறித்து பல நாள்கள் சிறப்பாகப் பேசுகின்றனர். தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார்.

இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்தது இவர்களைப் போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே.

இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய கழுமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன.

கோப்பெருஞ்சோழன்

உறையூரிலிருந்து அரசாண்டு வந்த கோப்பெருஞ்சோழன் இக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிராந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தான்.

பெருங்கிள்ளி

சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம்.

தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக; மிளிரும் நகைகளை அணிந்த வேலைக்காரப் பெண்கள் தங்கக் குவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக; அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும்; வெண்கொற்றக் குடைகளும் வீரத் தேர்களும் உடைய அரசர்களே நீவர் நீடு வாழ்க! (புறம். 367)

பெருங்கிள்ளிக்கும், சேரமன்னன் மாஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையான் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாகப் போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியாது.

கோச்செங்கணான்

கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்றுப் பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப் பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞான சம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப் பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

நடுத்தர அளவிலான களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில கரூருக்கு அருகேயுள்ள கழுமத்தில் நடைபெற்ற யுத்தத்தைப் பற்றி கொடுரமான வர்ணனைகளையும் தருகிறது. சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று அவனைச் செங்கணான் சிறைப்பிடித்தான்.

திருநாறையூரைப் பற்ற திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம். செங்கணானின் பகைவனுடைய யானைப் படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப் படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப் படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப் படையும், காலாட் படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது.

செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்த, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் புரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப் போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார். ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞான சம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நாடு முழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.

சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த வி வரங்களும் இம்மன்னனைப் பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.

இத்துடன் ‘கிள்ளி’ சோழர்களின் வரலாறு முடிகிறது. இனி சோழர்களின் பொற்காலத்தை தொடங்கி வைத்த விஜயாலய மன்னன் பற்றி அடுத்ததில் பாரக்கலாம்.

Bhutto (புட்டோ)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவுக்கு மரண தண்டனை; கொலை வழக்கில் தீர்ப்பு

பாகிஸ்தான் பிரதமராக இருந்த பூட்டோ மீது கொலை வழக்குத் தொடரப்பட்டது. அதில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அரசியலில் முக்கிய இடம் பெற்றவர் பூட்டோ. ஜின்னாவுக்கு அடுத்த படியாக பெரிய தலைவராக கருதப்பட்டவர்.
பூட்டோவின் இளமை பருவம், அரசியல் வாழ்க்கை பெரும் திருப்புமுனைகளை கொண்டது. அவருடைய இறுதிகால வாழ்க்கை சோதனை மிகுந்த கண்ணீர் காவியமாக அமைந்தது.

பம்பாயில் வசித்தவர்

பூட்டோவின் தந்தை ஷா நவாஸ். பெரிய பணக்காரர். திவானாக இருந்தார். தாயார் ஜக்கிபாய். இந்தியப்பெண். பூட்டோவின் முழுப்பெயர் ஜுல் பிகார் அலி பூட்டோ. 1928ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள `லர்கானா’ என்ற ஊரில் பிறந்தார். ஆனால் வளர்ந்தது எல்லாம் பம்பாயில் தான். பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது பூட்டோவுக்கு வயது 19.
பூட்டோ அமெரிக்காவில் கலிபோர்னியாவிலும், இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் படித்து வக்கீல் (பாரிஸ்டர்) பட்டம் பெற்றார்.
தொடக்கத்தில் வக்கீல் தொழில் செய்த பூட்டோ அரசியலிலும் ஆர்வமாக ஈடுபட தொடங்கினார். 1958க்கு பிறகு அவரது அரசியல் செல்வாக்கு ஓங்க தொடங்கியது. இஸ்கந்தர் மந்திரிசபையில் இடம் பெற்றார்.

மந்திரி ஆனார்

பாகிஸ்தானில் அயூப்கான் அதிபராக இருந்தபோது, அவரிடம் பூட்டோ வர்த்தக மந்திரியாக இருந்தார். பிறகு 1963ல் வெளி விவகார மந்திரியானார். 1967ம் ஆண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு `மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அயூப்கானுக்கு எதிராக செயல்பட்டதால் பூட்டோ 1968ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். உடனே பூட்டோ அமெரிக்காவுக்கு சென்று வசித்து வந்தார்.

இந்த நிலையில், யாகியாகான் பாகிஸ்தான் அதிபர் ஆனார்.

அவரது ஆட்சி காலத்தில் 1971ல் இந்தியாவுடன் நடந்த போரில் பாகிஸ்தான் தோற்றது. கிழக்கு பாகிஸ்தான் “வங்காளதேசம்” என்ற பெயரில் சுதந்திர நாடாகியது. இதனால், யாகியாகான் பதவி இழந்தார். அதன்பின் பூட்டோ பாகிஸ்தான் அதிபரானார். அதுவரையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி முறையே இருந்து வந்தது. அதிபர் ஆன 2 ஆண்டுகளுக்குப்பிறகு, பூட்டோ ராணுவ ஆட்சி முறையை ரத்து செய்தார். பாகிஸ்தானின் பிரதமராக பூட்டோ பதவி ஏற்றார்.

ராணுவப் புரட்சி

1977ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பூட்டோவின் “மக்கள் கட்சி” 216 இடங்களில் 155 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் தில்லு முல்லு நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி கிளர்ச்சி நடத்தினார்கள். இந்த கலவரத்தில் 250 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து 5-7-1977ல் பூட்டோவுக்கு எதிராக ராணுவ புரட்சி நடந்தது. பூட்டோவினால் ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட ஜியா-வுல்- ஹக் இந்த புரட்சியை நடத்தி ஆட்சியை கைப்பற்றிக்கொண்டார். பூட்டோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் தேர்தல் நடத்த ஜியா தீர்மானித்ததைத் தொடர்ந்து பூட்டோ விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் அடைப்பு

தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி இருந்த பூட்டோவை, ராணுவ அரசாங்கம் மீண்டும் கைது செய்தது. ராவல்பிண்டி சிறையில் அடைத்தது. தன்னுடைய அரசியல் எதிரியான அகமது கசூரி என்ற பாராளுமன்ற உறுப்பினரின் தந்தையை கொலை செய்ய உத்தரவிட்டதாக பூட்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது. பூட்டோவின் “மக்கள் கட்சி” தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் கசூரி. முதலில் பூட்டோவின் நண்பராக இருந்த அவர், பிறகு பூட்டோவின் ஆட்சியை கடுமையாக தாக்கி பிரசாரம் செய்தார். இதனால் கசூரியை தீர்த்துக்கட்ட பூட்டோ திட்டம் தீட்டினார் என்றும், 4 அதிகாரிகளிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தார் என்றும் கூறப்பட்டது.

வழக்கு

1974ல் கசூரியும், அவர் தந்தையும் ஒரு திருமணத்துக்கு சென்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அந்த காரை நோக்கி இயந்திரத் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. குறி தவறியதால் கசூரி உயிர் தப்பினார். அருகில் இருந்த அவர் தந்தை குண்டு பாய்ந்து இறந்தார். இதையொட்டி, பூட்டோ மீதும் மற்றும் ராணுவ அதிகாரிகள் முகமது அப்பாஸ், குலாம் முஸ்தபா, அரத் ஊக்பால், ராணா இஸ்திகார் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

தூக்கு தண்டனை

இந்த வழக்கை பாகிஸ்தானில் உள்ள லாகூர் ஐகோர்ட்டு விசாரித்து பூட்டோவுக்கும், மற்ற 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து 18-3-1978ல் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பூட்டோ அப்பீல் செய்தார். அப்பீலை 7 நீதிபதிகள் விசாரித்து பிப்ரவரி 6ந்தேதி தீர்ப்பு கூறினார்கள். தூக்கு தண்டனையை 4 நீதிபதிகள் உறுதி செய்தார்கள். 3 நீதிபதிகள் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். “மெஜாரிட்டி” தீர்ப்பின்படி தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. நீதிபதிகள் கருத்து பிளவுபட்டு இருப்பதால், தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பூட்டோ சார்பில் மீண்டும் அப்பீல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மார்ச் மாதம் 24ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. ஆயினும் தூக்குத்தண்டனையை குறைக்கலாம் என்று அதிபர் ஜியாவுக்கு நீதிபதிகள் சிபாரிசு செய்திருந்தனர். ஆனால் இரும்பு மனம் கொண்ட அதிபர் ஜியா அதை ஏற்கவே இல்லை.
தொரும்………

பூட்டோ தூக்கில் போடப்பட்டார்; கருணை காட்ட ஜியா மறுப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோ, தூக்கில் போடப்பட்டார். அவரிடம் கருணை காட்டும்படி உலகத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை, அதிபர் ஜியா நிராகரித்தார்.
தன் அரசியல் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், பூட்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சூரியனை பார்க்கவில்லை

7 அடி அகலமும், 10 அடி நீளமும் உள்ள சிறையில் பூட்டோவை அடைத்து வைத்து இருந்தார்கள். இந்த அறைக்குள் சூரிய வெளிச்சமே தெரியாது. இதை பூட்டோவின் நெருங்கிய நண்பரான பிர்ஓடா என்பவர் பூட்டோவை சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “பூட்டோ உணவு எதையும் சாப்பிட வில்லை. தேன் மட்டும் சாப்பிடுகிறார். சில நேரம் காபி குடிக்கிறார். இதனால் பூட்டோ உடல் எலும்பு கூடு போல இருக்கிறது. முகச்சவரம் செய்யாததால் தாடி வளர்ந்து இருக்கிறது” என்று தெரிவித்தார்.

கண் கலங்கினார்

விசாரணைக்காக ஒருமுறை பூட்டோ கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டபோது கண் கலங்கியபடி காட்சி அளித்தார். “இந்த நாட்டுக்கு நான் எந்த தீமையும் செய்யவில்லை. என்னை சிறையில் சித்ரவதை செய்கிறார்கள்” என்று அவர் முறையிட்டார்.

பூட்டோவின் மன உறுதி

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அதை ரத்து செய்யும்படி அதிபருக்கு கருணை மனு போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை பூட்டோ ஏற்கவில்லை. கருணை மனு தாக்கல் செய்தால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். ஆகவே கருணை மனு தாக்கல் செய்யமாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு தனது உறவினர்களும், நண்பர்களும் தனக்காக கருணை மனு கொடுக்கக்கூடாது என்றும் தடுத்துவிட்டார்.
ஆனால் பூட்டோவின் அக்காள் முனுவார் பூஸ்லாம் என்பவர் ஜியாவுக்கு கருணை மனு அனுப்பினார். அதனை கேள்விப்பட்ட பூட்டோ மிகவும் கோபம் அடைந்தார். சாகும் வரை அவர் தனது உறுதியில் இருந்து மாறவில்லை. தூக்கு மேடை ஏற அவர் அஞ்சவில்லை.

மனைவி மகள் கடைசி சந்திப்பு

பூட்டோவுக்கு 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் அமீர் பேகம். 2வது மனைவி பெயர் நசரத் இக்பாகனி. ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். பூட்டோவுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர். மகன்கள் லண்டனில் தங்கி படித்து வந்தனர். பூட்டோ சிறையில் அடைக்கப்பட்டதும் மனைவி நசரத்தும், மகள் பெனாசிரும் தீவிர அரசியலில் ஈடுபட்டார்கள். இதனால் இந்த 2 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். தூக்கில் போடப்படுவதற்கு முன்தினம் பூட்டோவை கடைசி முறையாக வந்து பார்க்குமாறு பூட்டோவின் மனைவி நசரத், மகள் பெனாசிர் ஆகியோருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடிதம் அனுப்பியது. அதன்படி அவர்கள் 3.4.1979 அன்று சந்தித்தனர். இதற்காக இருவரும் போலீஸ் வேன் மூலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வழக்கமாக பூட்டோவை சந்திக்க மணி நேரம் தான் கொடுக்கப்படும். ஆனால் இது கடைசி சந்திப்பு என்பதால் 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பூட்டோவுடன் நசரத்தும், பெனாசிரும் 3 மணி நேரம் தங்கி இருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த இருவரையும் சந்திப்பதற்கு யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. போலீஸ் வேனுக்குள் இருந்த நசரத், பெனாசிர் இருவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தனர். பூட்டோவை பார்க்கச்சென்ற குடும்பத்தினர் கதறி அழுதபோது, “எனக்காக யாரும் வருத்தப்படவேண்டாம். தூக்கு மேடை ஏற நான் பயப்படவில்லை” என்று பூட்டோ கூறினார்.

உலக நாடுகளை புறக்கணித்த ஜியா

பூட்டோவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதுமே அவர் உயிரைக் காப்பாற்ற உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் அனுப்பிய கடிதங்களை அதிபர் ஜியா பார்க்கவே இல்லை. பாகிஸ்தானின் வெளிநாட்டு இலாகா அலுவலகத்திலேயே அந்த கடிதங்கள் வைக்கப்பட்டு இருந்தன. பூட்டோவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதில் ஜியா குறியாக இருந்தார். பூட்டோ தூக்கிலிடப்படுவது உறுதி செய்யப்பட்டபின், செவ்வாய்க்கிழமை இரவும் சில வெளிநாட்டு தலைவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ரஷியா, சுவீடன், சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாட்டுத் தலைவர்கள் கடைசி நிமிடத்தில் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த அவசர செய்திகளை அனுப்பி வைத்தனர். பிரான்சு ஜனாதிபதி அவசர தந்தி அனுப்பினார். ஆனால் அவைகள் எல்லாவற்றையுமே அதிபர் ஜியா அடியோடு புறக்கணித்துவிட்டு பூட்டோவை தூக்கில் போட்டார்.

தூக்கில் போடப்பட்டபோது பூட்டோவுக்கு 51 வயது தான்.

பூட்டோவை தூக்கில் போடப்பட்ட செய்தியையும் பாகிஸ்தான் உடனடியாக அறிவிக்கவில்லை. உடலை அடக்கம் செய்தபின்பு 30 நிமிடம் கழித்து பகல் 11.30 மணிக்கே ரேடியோ மூலம் அறிவித்தது.

இரவோடு இரவாக

பொதுவாக, சூரியன் உதிக்கும் நேரத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் பூட்டோவை இரவோடு இரவாக தூக்கில் போட்டு உடலை விடிவதற்கு முன்பே சொந்த ஊருக்கு கொண்டுபோய் விட்டனர். உடல் கொண்டுபோகப்பட்ட விமானத்தில் ராணுவத்தின் காவல் பலமாக இருந்தது.

கடைசி நேரம்

தூக்கில் போடப்படுவதற்கு முன்னால் பூட்டோ குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில வாரங்களாக அவர் சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அதனால் தாடி வளர்ந்து இருந்தது. சவரம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயிலில் கையெழுத்து போடும்படி அதிகாரிகள் கூறினார்கள். அதன்படி அவர் கையெழுத்துப் போட்டார்.

கைகளை கட்டினார்கள்

பிறகு, பூட்டோவின் கைகளை பின்புறமாக கட்டினார்கள். அதன் பின் பூட்டோ தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறை அதிகாரிகள், ஒரு ராணுவ அதிகாரி, ஒரு மாஜிஸ்திரேட்டு ஆகியோர் உடன் சென்றனர். இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு பூட்டோ தூக்கில் போடப்பட்டார்.

25 ரூபாய் கூலி

பூட்டோவை தூக்கில் போட்டவரின் பெயர் தாரா மஷியா. இவர் பாகிஸ்தானில் வசிக்கும் கிறிஸ்தவர். தூக்குப்போடுவதையே பரம்பரை தொழிலாக செய்து வந்தவர். அவருக்கு கூலியாக 25 ரூபாய் கொடுக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு ஒரு ராணுவ லாரி சிறைச்சாலைக்குள் சென்றது. உடனடியாக பூட்டோ உடலை ஏற்றிக்கொண்டு விமான நிலையத்துக்கு சென்றது. பூட்டோ உடல், சிந்து மாநிலத்தில் உள்ள சுக்கூர் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்துக்கு கொண்டு போகப்பட்டது.

தந்தைக்கு அருகில்

பூட்டோ உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், சிந்து நதிக்கரையில் உள்ளது. பூட்டோவின் தந்தை ஷாநவாஸ் உடல் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு பக்கத்திலேயே பூட்டோவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் நடந்த இடத்துக்கு முதல் மனைவி அமீர் பேகம் வந்திருந்தார். அவர் முஸ்லிம் சம்பிரதாயப்படி முகம் முழுவதையும் மூடி `பர்தா’ அணிந்திருந்தார். உடல் அடக்கம் முடிந்ததும் உறவினர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

உலக தலைவர்கள் கண்டனம்

பூட்டோவை தூக்கில் போட்டதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இங்கிலாந்து பிரதமர் கல்லகன் இதுபற்றி கூறியதாவது:

“பூட்டோவை தூக்கில் போட்டது குறித்து மிகவும் வருத்தப்படுகிறேன். பூட்டோவுக்கு மன்னிப்பு வழங்கும்படி 3 முறை வேண்டுகோள் விடுத்தேன். அதை அலட்சியம் செய்துவிட்டனர்.”

இந்திரா காந்தி கூறியதாவது:

“இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை தருகிறது. பூட்டோவை கொல்ல வேண்டாம் என்று உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஜியா மதிக்காமல் நடந்து கொண்டார்.
பூட்டோவை தீர்த்துக்கட்டும் இந்த முடிவுக்கு சில வெளிநாட்டு சக்திகளும் காரணமாகும்.
பூட்டோவின் மனைவி நசரத்துக்கும், மகள் பெனாசிருக்கும் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1972.ல் சிம்லாவில் பெனாசிர் என்னை சந்தித்து உரையாடியதை நினைத்து கண் கலங்குகிறேன்.
பாகிஸ்தான் மக்களுக்கும் என் துயரத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு இந்திரா காந்தி கூறியிருந்தார்.

ஆனால் மலேசிய முன்னாள் பிரதமரான துங்கு அப்துல் ரகுமான், ஜியாவுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். “அரசியல் குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் பிரதமர் பூட்டோ. தேசத்துக்கு தலைமை பொறுப்பு ஏற்பவர்களுக்கு இது ஒரு பாடம்” என்று அவர் தெரிவித்து இருந்தார்.

பூட்டோ மரண சாசனம்

பூட்டோ சிறையில் இருந்தபோது தன் வாழ்க்கை குறிப்பை எழுதினார். அது பூட்டோவின் மரண சாசனம் போல் அமைந்துள்ளது. அதில் பூட்டோ கூறியிருந்ததாவது:
“என் எதிரியை கொலை செய்ய உத்தரவிட்டதாக என் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது அபாண்டமான குற்றச்சாட்டு. சிறையில் வாடி வதங்கி தூக்கு மேடையை சந்திப்பதற்காக நான் பிறந்தவன் அல்ல. ஆயினும் ஒரு நன்றி கெட்ட துரோகியினால் (ஜியா) நான் இன்று தூக்கு மேடையை சந்திக்க இருக்கிறேன். நான் அரசியல்வாதி என்பதைத்தவிர, கவிஞன், புரட்சிக்காரன். இப்படியே இவ்வளவு நாட்களும் வாழ்ந்தேன்.
இனி என் உடலில் இருந்து கடைசி மூச்சு பிரியும்வரை அப்படியே வாழ்வேன்.”
இவ்வாறு பூட்டோ குறிப்பிட்டு இருந்தார்.

கலவரம் தீ வைப்பு

ராவல்பிண்டியில் பூட்டோ ஆத்மா சாந்தியடைய ஒரு பெரிய பிரார்த்தனைக்கூட்டம் நடந்தது. “லியாகத்பாக்” பூந்தோட்டத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றபோது, அவர்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. அந்த வழியாகப் போன 3 பஸ்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.
பூட்டோ தூக்கிலிடப்பட்ட ராவல்பிண்டி சிறைச்சாலை அருகேயும் பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆண்களும், பெண்களும் மாரடித்து அழுதபடி சிறைச்சாலையை நோக்கி சென்றனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் பஸ்களையும், லாரிகளையும் தீ வைத்துக் கொளுத்தினார்கள். 6 பஸ்கள் அடியோடு எரிந்து சாம்பலாயின. பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியிலும் கலவரம் நடந்தது. கராச்சி நகர எல்லையில் உள்ள “இப்ராகிம் ஹைதிர்” என்ற இடத்தில் பூட்டோ ஆதரவாளர்கள் கூடினார்கள். தூக்கிலிடப் பட்ட பூட்டோவுக்காக தொழுகை நடத்தி இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாகிஸ்தான் அதிபர் ஜியா_வுல்_ஹக்குக்கு எதிராகவும், ராணுவ அரசாங்கத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். போலீஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தினார்கள்.

கடைசி பேச்சு

பூட்டோ தூக்கிலிடப்பட்டபோது நடந்த சம்பவங்கள் பற்றி பாகிஸ்தான் பத்திரிகைகள் பலவித தகவல்களை வெளியிட்டன.

அதில் ஒரு தகவல் வருமாறு:

பூட்டோ தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டவுடன் மஷியா அவரது இரு கால்களையும் கட்டி கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டினான்.

பூட்டோ கடைசியாகப் பேசினார்.

“இறைவா! எனக்கு உதவி செய்! நான் நிரபராதி!”

பூட்டோ கடைசியாக இந்த வார்த்தைகளை உச்சரித்தவுடன் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு “சிக்னல்” கொடுக்கப்பட்டது.
உடனே பூட்டோவின் காலடியில் இருந்த பகுதி விலகி கீழே சென்றது. அவர் பிணமாக தொங்கினார்.மொத்தம் 35 நிமிட நேரம் அவர் தூக்கில் தொங்க விடப்பட்டதாக அந்த பத்திரிகை கூறியது.

மாலை மலர்

New Page 2